இந்த உலகத்தில் எத்தனையோ நதிகள் இருக்கின்றன. சில நதிகள் நீண்ட நெடுந்தூரத்திற்கு ஓடி அங்குள்ள நிலங்களையெல்லாம் வளம் செய்து பெரும்பெயர் பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் கொண்டு அவர்கள் வாழ்வில் கலந்து நிற்கின்றன. அந்த நதிகளின் தோற்றுவாய்க்குச் சென்றுப் பார்த்தால் இவ்வளவு பெரிய நதியா, இவ்வளவு பெருமை பெற்ற நதியா இந்த சிறிய இடத்தில் இருந்து தோன்றியது என்று தோன்றும். அதனால் தான் நம் முன்னோர் நதிமூலம் பார்க்கக்கூடாது என்றனர். ஏனெனில் பெரும்பாலான நதிகள் தோன்றும் போது மிக எளிமையாகத் தான் தோன்றுகின்றன.
இந்த 'இந்தியக்கனவு 2020' என்ற இயக்கமும் அப்படி எளிமையான சூழலில் தோன்றியது தான். மும்பையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பேர் நம் நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும், நம் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குத் திட்டம் செயல்பெற நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும், எத்தனையோ விதமாய் நமக்கு உதவிய நம் தாய்த்திருநாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று நம்மை நாமே கேட்டு நல்லது செய்யவேண்டும், என்ற வேகத்தில் தொடங்கியது தான் 'இந்தியக் கனவு 2020'.
இந்த மூவரும் அமர், அக்பர், அந்தோணி என்று தங்களை அழைத்துக் கொண்டு ஜனவரி 2005ல் ஆரம்பித்தார்கள் தங்கள் எளிமையான சோதனையை. தம்மைப் போன்ற சிந்தனை உடையவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்; அவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் தங்கள் சிந்தனைகளை எல்லாம் ஒரு கையெழுத்து இதழில் பதித்து மற்றவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் சிறு சிறு உதவிகளை இல்லாதாருக்குச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் செய்த, செய்யும் செயல்களைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் இந்த வலைப்பூவில் எழுதப் போகிறோம்.
வலைப்பூவின் நோக்கங்கள்:
1. இந்தியக் கனவு 2020 என்னும் இந்த இயக்கத்தைப் பற்றிச் சொல்லுதல்
2. இந்த இயக்கத்தின் முந்தைய செயல்பாடுகள், தற்போதைய செயல்பாடுகள் ஆகியவற்றைப் பதித்தல்
3. ஒத்த சிந்தனைகள் உடையவரை ஒன்று சேர்த்தல்
4. இங்கு சொல்லப்பட்ட செயல்பாடுகளைப் படிப்பவர்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளாமலேயே தங்கள் அளவில் அவற்றை செயல்படுத்தத் தூண்டுதல்
5. செயல்பாடுகளுக்கு மேலதிக ஆலோசனையை வாசகர்களிடம் இருந்து பெறுதல்
இந்த இயக்கத்தைப் பற்றி அதிக விவரங்கள் அறிய இங்கே செல்லவும்.
Friday, January 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
குமரன்! நதிமூலம் என்பது இது தானா. இப்போது தான் அறிகிறேன். விளக்கத்திற்க்கு நன்றி. நதியும் மக்களுக்கு செய்யும் சேவையும் ஒன்று தான். சரியாக சொன்னீர்கள். அந்த நதியுல் இனையும் காட்டாறாக இல்லாவிடாலும், ஒரு சின்ன ஓடையாக நானும் எப்போதும் இருப்பேன். எனக்கு தெரியாத நிறைய விசயங்கள் சொல்வீர்கள் போல தெரிகிறது. தொடருங்கள்.
ஆமாம் சிவா. இது தான் நதிமூலம் என்பது. ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். அறிவில் சிறந்த சான்றோர்களும் பெரும் உதவி செய்யும் நதிகளும் தோன்றிய இடத்தைப் பார்த்தால் மிக எளிமையாக இருக்கும்; அவர்களின் பெருமை, அவைகளின் பெருமை தோன்றிய இடங்களின் எளிமையால் குறைந்து விடாது என்பதும் இதன் பொருள்.
எல்லோருமே இங்கு ஓடைகள் தான். சிறு துளி பெருவெள்ளம்.
ஆடு தாண்டும் காவிரியாக உற்பத்தியாகி இங்கு அகண்டகாவிரியானது போல்
ஆடு தாண்டும் காவிரியாக உற்பத்தியாகி இங்கு அகண்டகாவிரியானது போல்.
நதி மூலம் என்பது எந்த இடத்தில் தோன்றினாலும். அதற்கு மதிப்பு உண்டு. ரிஷி எந்த ஜாதியில் பிறந்தார் என பார்க்கக் கூடாது என்பது தான் முதல் அர்த்தம் நாரதர் பிறந்தது சலவைத் தொழிளாலி வீட்டில் அதனால் அவரது பிறப்பைப் பார்க்கக் கூடாது என்பர் என்ன நான் சொன்னது சரியா என பாருங்கள் தவறு என்றால் மாற்றிவிடுங்கள் குமரன்.
விளக்கம் சரி என்னார் ஐயா. மிக்க நன்றி.
Post a Comment