Friday, January 13, 2006

112: நதிமூலம்

இந்த உலகத்தில் எத்தனையோ நதிகள் இருக்கின்றன. சில நதிகள் நீண்ட நெடுந்தூரத்திற்கு ஓடி அங்குள்ள நிலங்களையெல்லாம் வளம் செய்து பெரும்பெயர் பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் கொண்டு அவர்கள் வாழ்வில் கலந்து நிற்கின்றன. அந்த நதிகளின் தோற்றுவாய்க்குச் சென்றுப் பார்த்தால் இவ்வளவு பெரிய நதியா, இவ்வளவு பெருமை பெற்ற நதியா இந்த சிறிய இடத்தில் இருந்து தோன்றியது என்று தோன்றும். அதனால் தான் நம் முன்னோர் நதிமூலம் பார்க்கக்கூடாது என்றனர். ஏனெனில் பெரும்பாலான நதிகள் தோன்றும் போது மிக எளிமையாகத் தான் தோன்றுகின்றன.

இந்த 'இந்தியக்கனவு 2020' என்ற இயக்கமும் அப்படி எளிமையான சூழலில் தோன்றியது தான். மும்பையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பேர் நம் நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும், நம் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குத் திட்டம் செயல்பெற நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும், எத்தனையோ விதமாய் நமக்கு உதவிய நம் தாய்த்திருநாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று நம்மை நாமே கேட்டு நல்லது செய்யவேண்டும், என்ற வேகத்தில் தொடங்கியது தான் 'இந்தியக் கனவு 2020'.

இந்த மூவரும் அமர், அக்பர், அந்தோணி என்று தங்களை அழைத்துக் கொண்டு ஜனவரி 2005ல் ஆரம்பித்தார்கள் தங்கள் எளிமையான சோதனையை. தம்மைப் போன்ற சிந்தனை உடையவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்; அவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் தங்கள் சிந்தனைகளை எல்லாம் ஒரு கையெழுத்து இதழில் பதித்து மற்றவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் சிறு சிறு உதவிகளை இல்லாதாருக்குச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் செய்த, செய்யும் செயல்களைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் இந்த வலைப்பூவில் எழுதப் போகிறோம்.

வலைப்பூவின் நோக்கங்கள்:

1. இந்தியக் கனவு 2020 என்னும் இந்த இயக்கத்தைப் பற்றிச் சொல்லுதல்
2. இந்த இயக்கத்தின் முந்தைய செயல்பாடுகள், தற்போதைய செயல்பாடுகள் ஆகியவற்றைப் பதித்தல்
3. ஒத்த சிந்தனைகள் உடையவரை ஒன்று சேர்த்தல்
4. இங்கு சொல்லப்பட்ட செயல்பாடுகளைப் படிப்பவர்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளாமலேயே தங்கள் அளவில் அவற்றை செயல்படுத்தத் தூண்டுதல்
5. செயல்பாடுகளுக்கு மேலதிக ஆலோசனையை வாசகர்களிடம் இருந்து பெறுதல்

இந்த இயக்கத்தைப் பற்றி அதிக விவரங்கள் அறிய இங்கே செல்லவும்.

Monday, January 09, 2006

107: வாராது வந்த மாமணி

உலகத்தில் எந்த நாடாயிருந்தாலும் சரி, பகுதியாய் இருந்தாலும் சரி, இனமாய் இருந்தாலும் சரி, குழுவாய் இருந்தாலும் சரி, தனி மனிதனாய் இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தைக் கண்கூடாகக் காணலாம். வாழ்வதும் தாழ்வதும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். ஒரு நாடோ பிரதேசமோ இனமோ குழுவோ தாழ்வுக்குச் சென்று அவதிப் படும் போது யாரோ ஒருவர் வந்து அதனை மேல் நிலைக்குக் கொண்டு செல்வார். சரித்திரக் காலத்திற்கு முன் இப்படி தாழ்விலிருந்து வாழ்விற்கு அழைத்துச் சென்றவர்கள் நம்மிடையே இப்போது தெய்வமாகப் போற்றப் பட்டுக் கொண்டிருக்கலாம் - ஐயன் வள்ளுவன் சொன்னபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

அண்மையில் நம் பாரத நாடு அப்படிப் பல பேரைக் கண்டிருக்கிறது. பட்டியல் இட்டால் சிலரை அறியாமல் விட்டுவிட வாய்ப்பிருப்பதால் பட்டியல் இடவில்லை.

அப்படி வாராது வந்த மாமணிகளில் ஒருவர் தற்போது நம் குடியரசுத் தலைவராக இருக்கும் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விஞ்ஞானி அப்துல் கலாமைத் தான் தெரியும். அவர் அளவற்ற சாதனைகள் செய்துள்ளார் என்று தெரியுமே ஒழிய மேல் விவரங்கள் தெரியாது. அவரை நம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற போது மகிழ்ச்சி அடைந்தாலும் அந்தப் பதவியில் அவரால் என்ன சாதிக்க முடிந்துவிடும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

ஒன்றரை வருடங்களுக்கு முன் நண்பர் நடராஜன் அறிமுகமானார். அவருடன் மின்னஞ்சல் மூலமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது தான் அவர் தன் மனத்தில் இருக்கும் ஒன்றைப் பற்றிக் கூறினார். தன் எண்ணங்களைப் பதிந்து வைத்திருக்கும் வலைப்பக்கத்தையும் காண்பித்தார். அந்த வலைப் பக்கத்தில் தன்னையும் தன் குடும்பத்தாரையும் அறிமுகப்படுத்திய பின் தான் எப்படி அப்துல் கலாம் அவர்களின் எண்ணங்களால் தூண்டப் பெற்று பாரத நாட்டிற்காக ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்பதையும் விளக்கியிருந்தார். நான் அதைப் படித்தப் போது தான் இந்தக் கால இளைஞர்கள் நம் குடியரசுத் தலைவரால் எப்படி எல்லாம் உந்தப் படுகிறார்கள் என்பது புரிந்தது.

அந்தப் புரிதல் மேலும் வலுப்பட்டது, ஆன்மிகப் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் என் தம்பி 'அக்கினிச் சிறகுகள்' படிப்பதைப் பார்த்த போது தான். எத்தனை இளைஞர்களை நல்ல வழியில் செல்லத் தூண்டுகிறார் இவர் என்று தெரிந்தது. எத்தனை இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இவர் என்று தெரிந்தது. அப்படி ஒரு உந்துதல் சக்தியாக இருக்கும் அப்துல் கலாம் நம் பாரத அன்னை பெற்ற, வாராது வந்த மாமணிகளில் ஒருவர் என்பதில் என்ன சந்தேகம்?

அப்துல் கலாம் அவர்களின் 'இந்தியத் தொலைநோக்கு 2020' என்னும் செயல்திட்டத்தினால் தூண்டப்பட்டதே இந்த 'இந்தியக் கனவு 2020' என்னும் இயக்கம்.

Sunday, January 08, 2006

105: கனவு மெய்ப்பட வேண்டும்

கனவுகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். சிலருக்கு பெரும்புகழ் பெற வேண்டும் என்று கனவு. பலருக்கு நிறைய செல்வம் சேர்த்து வளமான வாழ்வு வாழவேண்டும் என்று கனவு. சிலருக்கு தன் குடும்பம் எந்தக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று கனவு. இப்படிப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். ஆனால் எல்லாக் கனவுகளும் நனவாக வேண்டும் எனில் முயற்சி வேண்டும். செயல்பட வேண்டும். ஒரு தொலைநோக்குடன் செயல்பட வேண்டும். இல்லையேல் அந்தக் கனவுகள் வெறும் கனவுகளாகவே நின்றுவிடும்.

இந்தப் வலைப்பூவில் அப்படி ஒரு கனவினைக் கண்டு அந்தக் கனவினை நனவாக்க தம்மால் தங்களுக்குத் தெரிந்த வகையில் முயற்சி செய்யும் ஒரு சிறு இளைஞர் கூட்டத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அவர்களின் கனவு என்ன? எந்த நோக்கத்துடன் இந்த இயக்கம் ஆரம்பிக்கப் பெற்றது? எந்த நோக்கத்துடன் இந்த வலைப்பூ ஆரம்பிக்கப் பெற்றது? இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் என்ன என்ன? என்பதையெல்லாம் இந்த வலைப்பூவில் பார்க்கலாம்.

இந்த இயக்கத்தில் என்னுடன் பங்குகொள்ளும் மற்ற வலைப் பதிவாளர்கள் நடராஜனும் சிவாவும் இந்த வலைப்பூவிலும் என்னுடன் பங்கு கொண்டுப் பதிவுகள் இடுவார்கள்.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே! இம்மூன்றும் செய்.

- மகாகவி பாரதியார்.