வெகு நாளாக இந்தத் தலைப்பில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எப்படித் தொடங்குவது என்று தான் தெரியவில்லை. அண்மையில் 'மிட் டே (Mid Day)' என்னும் மும்பை தினசரி ஒன்று இந்த இயக்கம் தோன்றியதைப் பற்றி ஒரு
கட்டுரை வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அதனையே மொழிபெயர்த்து எழுதிவிடலாம் என்று தோன்றியது.
இந்த இயக்கத்தின் தலைப்பினை ஏற்கனவே பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் இந்தியத் திருநாட்டின் ஈடு இணையற்றத் தவப்புதல்வன், வாராது வந்த மாமணி, நம் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இந்தச் செயல்திட்டத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார். அவரால் தூண்டப்பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சிலரே இந்த இயக்கத்தினைத் தோற்றுவித்தனர். தற்போது இது நம் நாட்டின் பல நகரங்களிலும் பற்பல தன்னார்வலர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு மிக வேகமாகப் பரவி வருகிறது. இனி ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.
***
மும்பையின் கோர்கோவனின் ஆரே மில்க் காலனியின் சேரிப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பதன் மூலம் மூன்று கணினி மென்பொருளாளர்கள் -
வருண் ரங்கராஜன்,
நடராஜன் ராமன், ஈஸ்வரமூர்த்தி - நம் குடியரசுத் தலைவரின் 'தொலைநோக்கம் 2020'க்கு தங்களின் பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். மூவரும் தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீஸஸில் (TCS) பணிபுரிகின்றனர்.
அவர்களின் முயற்சியான இந்தியக் கனவு இயக்கத்தின் நோக்கம் இந்தச் சிறுவர்கள் கல்வியறிவில் தன்னிறைவு பெறச் செய்வதே.
இந்த மூவரும் சந்தித்துக் கொண்டது திருவனந்தபுரத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தின் செயற்பயிற்சி நிலையத்தில். அந்த நேரத்தில் தான் தங்கள் மூவருக்கும் நடுவே பொதுவான ஆசையாக இருப்பது அடிமட்ட நிலையிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே என்று மூவரும் உணர்ந்தனர். தற்செயலாக பணிக்காக மூவரும் டி.சி.எஸ்ஸின் அந்தேரிக் கிளைக்கே அனுப்பப்பட்ட போது தங்களின் ஆசைக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கவிரும்பினர்; இந்தியக் கனவு 2020 இயக்கம் தோன்றியது.
'இந்தக் குழந்தைகளுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்றோ இல்லை எழுத்தறியாமையை நீக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றோ எங்களுக்கு திடீரென்று ஞானோதயம் வந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நடராஜனையும் ஈஸ்வரையும் சந்தித்தப் பின் இந்த பிரச்சனையைத் தீர்க்க நாமும் ஏதாவது செய்ய முடியும் என்பதனை நான் உணர்ந்தேன்' என்கிறார் தற்போது கோர்கோவனில் தங்கியிருக்கும் வருண் ரங்கராஜன்.அவர்களால் முடிந்த அளவு என்று நினைத்துத் தொடங்கியதே அந்தேரி கிழக்கில் இருக்கும் விஜய்நகரில் வாழும் ஏழைச் சிறுவர்களுக்கு ஜனவரி 2005ல் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியது.
போன வருடம் ஜீன் மாதத்தில் இருந்து வருணும் ஈஸ்வரமூர்த்தியும் ஆரே மில்க் காலனியில் இருக்கும் ஒரு சிறு வாடகை அறையில் சிறுவர் சிறுமியர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் அறிவுப் பரப்பைக் கூட்டும் முயற்சியாக இந்த இருவரும் ஆங்கிலம், கணிதம், அடிப்படைப் புவியியல், கைத்தொழில்/கலைகள், அடிப்படை அறிவியல் போன்றவற்றைச் சொல்லித் தருகிறார்கள்.
பாடப்புத்தகங்கள், மற்ற கல்விக்குத் தேவையான உபகரணங்கள், படிப்பவர்களுக்குத் தேவையானவைகள் போன்ற செலவினங்களுக்கான நிதி இந்த இளைஞர்களின் சொந்தப் பணமே. இவர்கள் இருவரின் நண்பர் நடராஜன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவரும் குறிப்பிட்ட அளவு நிதியினை இந்த இயக்கத்திற்காக அனுப்புகிறார்.
***
மேற்கொண்டு அந்தக் கட்டுரையில் உள்ளதைப் படித்துப் பாருங்கள்.
இந்தக் கட்டுரையில் இந்த மூன்று இளைஞர்களை மட்டுமே கூறியிருந்தாலும் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எண்ணற்ற இளைஞர்கள் இந்த இயக்கத்தில் தற்போது ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஐ.பி.எம்., டார்கெட் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இளைஞர்கள். மென்பொருளாளர்கள் மட்டும் இல்லாமல் வேறு இளைஞர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பொறியியற் கல்லூரி மாணவர்களும் மற்றக் கல்லூரி மாணவர்களும் இதில் ஈடுபட்டுத் தங்களின் பங்கினை ஆற்றிவருகிறார்கள்.
நடராஜனைப் போல் இந்தியாவில் இருந்து தங்களின் பங்கினை ஆற்றவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் பணியின் பொருட்டு வேறு நாடுகளில் (குறிப்பாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில்) வசிக்கும் இந்திய இளைஞர்கள் தாங்கள் வெளிநாடுகளில் இருக்கும் வரை தங்களால் முடிந்த பங்கான நிதியுதவியையும் இந்தக் கனவினை மற்ற இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இயக்கத்தினைப் பற்றி மேலும் அறிய
இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள். எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணம் கொண்ட யாவரும் வாருங்கள். நேரடியாக களத்தில் இறங்கி பணி புரியும் தன்னார்வலர்களே இன்றைய முக்கியத் தேவை.
***
இந்தப் பதிவில் வரும் ஆண்பாலரைக் குறிக்கும் சிறுவர், இளைஞர்கள் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.