Monday, January 09, 2006

107: வாராது வந்த மாமணி

உலகத்தில் எந்த நாடாயிருந்தாலும் சரி, பகுதியாய் இருந்தாலும் சரி, இனமாய் இருந்தாலும் சரி, குழுவாய் இருந்தாலும் சரி, தனி மனிதனாய் இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தைக் கண்கூடாகக் காணலாம். வாழ்வதும் தாழ்வதும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். ஒரு நாடோ பிரதேசமோ இனமோ குழுவோ தாழ்வுக்குச் சென்று அவதிப் படும் போது யாரோ ஒருவர் வந்து அதனை மேல் நிலைக்குக் கொண்டு செல்வார். சரித்திரக் காலத்திற்கு முன் இப்படி தாழ்விலிருந்து வாழ்விற்கு அழைத்துச் சென்றவர்கள் நம்மிடையே இப்போது தெய்வமாகப் போற்றப் பட்டுக் கொண்டிருக்கலாம் - ஐயன் வள்ளுவன் சொன்னபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

அண்மையில் நம் பாரத நாடு அப்படிப் பல பேரைக் கண்டிருக்கிறது. பட்டியல் இட்டால் சிலரை அறியாமல் விட்டுவிட வாய்ப்பிருப்பதால் பட்டியல் இடவில்லை.

அப்படி வாராது வந்த மாமணிகளில் ஒருவர் தற்போது நம் குடியரசுத் தலைவராக இருக்கும் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விஞ்ஞானி அப்துல் கலாமைத் தான் தெரியும். அவர் அளவற்ற சாதனைகள் செய்துள்ளார் என்று தெரியுமே ஒழிய மேல் விவரங்கள் தெரியாது. அவரை நம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற போது மகிழ்ச்சி அடைந்தாலும் அந்தப் பதவியில் அவரால் என்ன சாதிக்க முடிந்துவிடும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

ஒன்றரை வருடங்களுக்கு முன் நண்பர் நடராஜன் அறிமுகமானார். அவருடன் மின்னஞ்சல் மூலமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது தான் அவர் தன் மனத்தில் இருக்கும் ஒன்றைப் பற்றிக் கூறினார். தன் எண்ணங்களைப் பதிந்து வைத்திருக்கும் வலைப்பக்கத்தையும் காண்பித்தார். அந்த வலைப் பக்கத்தில் தன்னையும் தன் குடும்பத்தாரையும் அறிமுகப்படுத்திய பின் தான் எப்படி அப்துல் கலாம் அவர்களின் எண்ணங்களால் தூண்டப் பெற்று பாரத நாட்டிற்காக ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்பதையும் விளக்கியிருந்தார். நான் அதைப் படித்தப் போது தான் இந்தக் கால இளைஞர்கள் நம் குடியரசுத் தலைவரால் எப்படி எல்லாம் உந்தப் படுகிறார்கள் என்பது புரிந்தது.

அந்தப் புரிதல் மேலும் வலுப்பட்டது, ஆன்மிகப் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் என் தம்பி 'அக்கினிச் சிறகுகள்' படிப்பதைப் பார்த்த போது தான். எத்தனை இளைஞர்களை நல்ல வழியில் செல்லத் தூண்டுகிறார் இவர் என்று தெரிந்தது. எத்தனை இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இவர் என்று தெரிந்தது. அப்படி ஒரு உந்துதல் சக்தியாக இருக்கும் அப்துல் கலாம் நம் பாரத அன்னை பெற்ற, வாராது வந்த மாமணிகளில் ஒருவர் என்பதில் என்ன சந்தேகம்?

அப்துல் கலாம் அவர்களின் 'இந்தியத் தொலைநோக்கு 2020' என்னும் செயல்திட்டத்தினால் தூண்டப்பட்டதே இந்த 'இந்தியக் கனவு 2020' என்னும் இயக்கம்.

8 comments:

Anonymous said...

Miga sariyaga sonneergal Kumaran. Dr. Abdul Kalam avargalin college junior enbathil nan perumitham adaigiren.

Nandri,
Kumaresh

G.Ragavan said...

ம்ம்ம்.. நல்ல கனவு நல்ல விளைவைத் தரும். அப்துல் கலாமின் கனவுகளும் நாட்டிற்காகவே. நல்லதிற்காகவே. அவைகள் நிறைவறிட வாழ்த்துவோம். விரும்புவோம்.

குமரன் (Kumaran) said...

நன்றி குமரேஷ். இந்தப் பெருமிதம் நிறைய பேருக்கு இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். வாழ்த்துவோம். விரும்புவோம். நம்மால் இயன்றதையும் செய்வோம்.

டிபிஆர்.ஜோசப் said...

என்னோட பதிவில உங்க பின்னூட்டத்தை பாத்ததும் உங்க பதிவை படிச்சேன்.

அழகா சுருக்கமா எழுதியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

படிச்சுக் கருத்து சொன்னதற்கு நன்றி ஜோச்ஃப் சார்.

மாயவரத்தான் said...

இன்றைய தினமலரில் உங்களுடைய இந்தப் பதிவு குறித்து...!
//http://www.dinamalar.com/2006jan15/flash.asp//

குமரன் (Kumaran) said...

தகவலுக்கு மிக்க நன்றி மாயவரத்தான். பார்த்து மகிழ்ந்தேன்.