Sunday, June 18, 2006

இந்தியக் கனவு 2020 - எப்படித் தோன்றியது?

வெகு நாளாக இந்தத் தலைப்பில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எப்படித் தொடங்குவது என்று தான் தெரியவில்லை. அண்மையில் 'மிட் டே (Mid Day)' என்னும் மும்பை தினசரி ஒன்று இந்த இயக்கம் தோன்றியதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அதனையே மொழிபெயர்த்து எழுதிவிடலாம் என்று தோன்றியது.

இந்த இயக்கத்தின் தலைப்பினை ஏற்கனவே பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் இந்தியத் திருநாட்டின் ஈடு இணையற்றத் தவப்புதல்வன், வாராது வந்த மாமணி, நம் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இந்தச் செயல்திட்டத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார். அவரால் தூண்டப்பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சிலரே இந்த இயக்கத்தினைத் தோற்றுவித்தனர். தற்போது இது நம் நாட்டின் பல நகரங்களிலும் பற்பல தன்னார்வலர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு மிக வேகமாகப் பரவி வருகிறது. இனி ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

***

மும்பையின் கோர்கோவனின் ஆரே மில்க் காலனியின் சேரிப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பதன் மூலம் மூன்று கணினி மென்பொருளாளர்கள் - வருண் ரங்கராஜன், நடராஜன் ராமன், ஈஸ்வரமூர்த்தி - நம் குடியரசுத் தலைவரின் 'தொலைநோக்கம் 2020'க்கு தங்களின் பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். மூவரும் தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீஸஸில் (TCS) பணிபுரிகின்றனர்.

அவர்களின் முயற்சியான இந்தியக் கனவு இயக்கத்தின் நோக்கம் இந்தச் சிறுவர்கள் கல்வியறிவில் தன்னிறைவு பெறச் செய்வதே.

இந்த மூவரும் சந்தித்துக் கொண்டது திருவனந்தபுரத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தின் செயற்பயிற்சி நிலையத்தில். அந்த நேரத்தில் தான் தங்கள் மூவருக்கும் நடுவே பொதுவான ஆசையாக இருப்பது அடிமட்ட நிலையிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே என்று மூவரும் உணர்ந்தனர். தற்செயலாக பணிக்காக மூவரும் டி.சி.எஸ்ஸின் அந்தேரிக் கிளைக்கே அனுப்பப்பட்ட போது தங்களின் ஆசைக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கவிரும்பினர்; இந்தியக் கனவு 2020 இயக்கம் தோன்றியது.

'இந்தக் குழந்தைகளுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்றோ இல்லை எழுத்தறியாமையை நீக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றோ எங்களுக்கு திடீரென்று ஞானோதயம் வந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நடராஜனையும் ஈஸ்வரையும் சந்தித்தப் பின் இந்த பிரச்சனையைத் தீர்க்க நாமும் ஏதாவது செய்ய முடியும் என்பதனை நான் உணர்ந்தேன்' என்கிறார் தற்போது கோர்கோவனில் தங்கியிருக்கும் வருண் ரங்கராஜன்.அவர்களால் முடிந்த அளவு என்று நினைத்துத் தொடங்கியதே அந்தேரி கிழக்கில் இருக்கும் விஜய்நகரில் வாழும் ஏழைச் சிறுவர்களுக்கு ஜனவரி 2005ல் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியது.

போன வருடம் ஜீன் மாதத்தில் இருந்து வருணும் ஈஸ்வரமூர்த்தியும் ஆரே மில்க் காலனியில் இருக்கும் ஒரு சிறு வாடகை அறையில் சிறுவர் சிறுமியர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் அறிவுப் பரப்பைக் கூட்டும் முயற்சியாக இந்த இருவரும் ஆங்கிலம், கணிதம், அடிப்படைப் புவியியல், கைத்தொழில்/கலைகள், அடிப்படை அறிவியல் போன்றவற்றைச் சொல்லித் தருகிறார்கள்.

பாடப்புத்தகங்கள், மற்ற கல்விக்குத் தேவையான உபகரணங்கள், படிப்பவர்களுக்குத் தேவையானவைகள் போன்ற செலவினங்களுக்கான நிதி இந்த இளைஞர்களின் சொந்தப் பணமே. இவர்கள் இருவரின் நண்பர் நடராஜன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவரும் குறிப்பிட்ட அளவு நிதியினை இந்த இயக்கத்திற்காக அனுப்புகிறார்.

***

மேற்கொண்டு அந்தக் கட்டுரையில் உள்ளதைப் படித்துப் பாருங்கள்.

இந்தக் கட்டுரையில் இந்த மூன்று இளைஞர்களை மட்டுமே கூறியிருந்தாலும் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எண்ணற்ற இளைஞர்கள் இந்த இயக்கத்தில் தற்போது ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஐ.பி.எம்., டார்கெட் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இளைஞர்கள். மென்பொருளாளர்கள் மட்டும் இல்லாமல் வேறு இளைஞர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பொறியியற் கல்லூரி மாணவர்களும் மற்றக் கல்லூரி மாணவர்களும் இதில் ஈடுபட்டுத் தங்களின் பங்கினை ஆற்றிவருகிறார்கள்.

நடராஜனைப் போல் இந்தியாவில் இருந்து தங்களின் பங்கினை ஆற்றவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் பணியின் பொருட்டு வேறு நாடுகளில் (குறிப்பாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில்) வசிக்கும் இந்திய இளைஞர்கள் தாங்கள் வெளிநாடுகளில் இருக்கும் வரை தங்களால் முடிந்த பங்கான நிதியுதவியையும் இந்தக் கனவினை மற்ற இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தினைப் பற்றி மேலும் அறிய இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள். எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணம் கொண்ட யாவரும் வாருங்கள். நேரடியாக களத்தில் இறங்கி பணி புரியும் தன்னார்வலர்களே இன்றைய முக்கியத் தேவை.

***

இந்தப் பதிவில் வரும் ஆண்பாலரைக் குறிக்கும் சிறுவர், இளைஞர்கள் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

11 comments:

Unknown said...

மிகவும் நல்ல முயற்சி. நீங்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றிருக்கிறீர்களா குமரன்?
நானும் உங்களைப்போல் அமெரிக்காவில் இருப்பதால் என்னால் நேரடியாக களத்தில் இறங்கமுடியாது. அதனால் AID (http://www.aidindia.org) என்ற அமைப்பில் தன்னார்வலராக பணியாற்றி இந்தியாவில் உள்ள NGOக்களின் மூலம் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் dream india 2020 தளத்துக்கு geocities மற்றும் freehomepage இலவச webhosting பயன்படுத்துகிறீர்கள் போலிருக்கிறது. நிறைய விளம்பரங்கள் காண்கிறேன். நான் எப்படியும் anniyalogam.comக்கு பணம் கட்டி விளம்பரமற்ற சேவையை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் india2020 தளத்தையும் அங்கேயே host செய்யலாம். விருப்பமிருந்தால் சொல்லுங்கள்..

Unknown said...

அருமையான இயக்கம் குமரன்.நான் முன்பு ஒரு முறை அந்த வலைதளம் சென்று பார்த்தேன்.என் ஆய்வு social marketing துறையில் என்பதால் என்னால் இதற்கு கண்டிப்பாக உதவி செய்ய முடியும்.நான் முனைவர் பட்டம் பெற்றதும் அந்த துறையில் எனக்கு அதிக தொடர்புகள் கிடைக்கும்.அப்போது நிச்சயம் என்னால் இயன்றதை செய்வேன்.

வெங்கட்ரமணி அவர்கள் செய்ய முன்வந்த உதவிக்கும் என் நன்றி.

Santhosh said...

நல்ல பதிவு, முயற்சி குமரன். நீங்கள் நம்முடைய மூன்றாவது மெயிலில் நாடராஜனை பற்றி கூறி இந்தியா 2020 பற்றியும் சொன்னிங்க.. அன்றே சொன்னது போல கண்டிப்பாக என்னால் ஆன உதவியை செய்யத் தயாராக இருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வெங்கடரமணி. நானும் இந்த இயக்கத்தில் பங்கேற்றிருக்கிறேனா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இந்த இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நான் அமெரிக்காவில் தான் இருக்கிறேன். தொடங்குவதற்கு முன்னாலிலிருந்து நண்பர் நடராஜன் மூலமாக தொடர்ந்து ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் அறிந்து கொண்டு வந்திருக்கிறேன். அவர்கள் தந்த வாய்ப்பினால் அவர்கள் செய்யும் நல்ல காரியத்திற்கு சிறிது நிதி உதவியும் வாய்ச்சொல் ஊக்கமும் தந்திருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் அவ்வளவு முக்கியமானவை அல்ல. களத்தில் இறங்கித் தங்கள் பங்கினை அளிக்க வேண்டும்; அது தான் மிக முக்கியம்; தாங்கள் செய்வது சேவை இல்லை; தங்கள் சமூகக் கடமை என்று எண்ணும் இந்த இயக்கத்தினரில் ஒருவனாக என்னை எண்ணிக் கொள்ளக் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கிறது.

ஆனால் 'நான் வெளிநாட்டில் இருக்கிறேன். அதனால் என்னால் களப்பணி செய்யமுடியாது' என்று சொல்லிவிட்டு வாளாவிருக்காமல் நீங்கள் சொன்னது போல் நம்மால் முடிந்த வரை என்ன செய்ய முடியுமோ அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

வலைப்பக்கத்தை உங்கள் அந்நியலோகத்தில் ஏற்ற முன்வந்ததற்கு மிக்க நன்றி வெங்கடரமணி. ஏற்கனவே பணம் கட்டி விளம்பரமற்ற சேவையைப் பெறுவதற்கான ஏற்பாடுகளில் இயக்கத்தினர் இறங்கிவிட்டனர் என்று எண்ணுகிறேன். நண்பர் நடராஜனிடம் நீங்கள் சொன்னதைச் சொல்கிறேன். உதவி வேண்டும் என்றால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி செல்வன். உங்களின் உதவியைப் பெற இயக்கத்தினர் மிக்க ஆவலுடன் இருப்பார்கள். நீங்கள் விரும்பினால் இப்போதே மின்னஞ்சல் தொடர்புகளில் சேர்ந்து கொள்ளலாம். அண்மையில் சிவபாலனும் என்னைப் போல் இந்த மின்னஞ்சல் தொடர்புகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்படிச் சேர்ந்து கொண்டால் இப்போதிருந்தே உங்கள் ஆலோசனைகளை இந்த இயக்கத்தினருக்குக் கொடுக்கலாமே. விருப்பமிருந்தால் மின்னஞ்சலில் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சந்தோஷ். நாம் மின்னஞ்சல் தொடர்பு கொண்டத் தொடக்கத்தில் இந்த இயக்கத்தைப் பற்றியும் நடராஜனைப் பற்றியும் சொன்னேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் இப்போதே நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கலாம். நீங்களும் அமெரிக்காவில் தற்போது இருப்பதால் மின்னஞ்சல் தொடர்பிலும் ஆலோசனை சொல்வதிலும் சேர்ந்து கொள்ளலாம். பின்னர் இந்தியா திரும்பிச் செல்லும் போது அந்த நகரத்தில் இருக்கும் இயக்கத்தினருடன் சேர்ந்து பணியாற்றலாம். விருப்பமிருந்தால் மின்னஞ்சல் செய்யுங்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி நாகையன். விரைவில் வந்து தங்களின் பங்கினை ஆற்றுங்கள்.

Varun said...

Sooper Kumaran. You are doing a great job thru this blog. Thanks for patiently typing all this in Tamil. I am also learning new words in tamil (Min anjal? wow!)

Just a suggestion...but if you think its a good idea and if you have the time, why dont you try translating PAU in your blog?

Varun said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

Varun. That was the idea I have for a long time. I will translate the PAU articles also and post them here. It is in my list of things to do but did not find the drive to that yet. Thanks for your comment.

குமரன் (Kumaran) said...

வருகைக்கு நன்றி India Vision 2020.